பூமியை நோக்கி விரையும் 8.5 டன் விண்வெளி நிலையம்... என்ன செய்யப்போகிறது சீனா? #Tiangong1

பூமியை நோக்கி விரையும் 8.5 டன் விண்வெளி நிலையம்... என்ன செய்யப்போகிறது சீனா? #Tiangong1

Published:Updated:
பூமியை நோக்கி விரையும் 8.5 டன் விண்வெளி நிலையம்... என்ன செய்யப்போகிறது சீனா? #Tiangong1
பூமியை நோக்கி விரையும் 8.5 டன் விண்வெளி நிலையம்... என்ன செய்யப்போகிறது சீனா? #Tiangong1
0Comments
Share

நிலத்தில் மட்டுமின்றி வான்வெளியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன உலக நாடுகள். அதற்காக புதுப்புது செயற்கைக்கோள்களை தொடர்ச்சியாக விண்ணில் ஏவிக்கொண்டே இருக்கின்றன. சில நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தையே நிறுவியிருக்கின்றன. விண்வெளியில் சுற்றிக்கொண்டிருந்தாலும் இவை அனைத்தும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. செயற்கைக்கோள்களை ஒரே சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்துவதற்கான வசதிகள் அவற்றில் இருக்கும். செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சற்று விலகினாலும் த்ரஸ்டர்கள் இயக்கப்பட்டு, அவை சரியான பாதையில் சுற்ற வைக்கப்படும். த்ரஸ்டர்கள் செயல்படுவதற்குத் தேவையான எரிபொருள் ஏற்கெனவே அதில் நிரப்பப்பட்டிருக்கும்.

இந்த செயற்கைக்கோள்கள் செயல்படுவதற்கென்று குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவை செயலிழக்கும். எரிபொருள் தீர்ந்து விட்டாலோ அல்லது தரையிலிருந்து அவற்றை தொடர்புகொள்ள முடியாமல் போனாலும் அவை செயலிழந்ததாகவே கருதப்படும். செயலிழந்த செயற்கைகோள்களின் சுற்றுவட்டப்பாதையைச் சரி செய்ய முடியாது என்பதால், அவை விண்வெளிக் கழிவுகளாக மாறிவிடும். விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் தேவையற்ற பொருள்களான ராக்கெட் பாகங்கள், கைவிடப்பட்ட செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் போன்றவையும் விண்வெளிக் கழிவுகளாக கருதப்படுகின்றன.  அப்படி செயலிழந்த சீனாவின் விண்வெளி நிலையம் ஒன்று இன்னும் சில மாதங்களில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் சொர்க்க அரண்மனை தியான்குங்-1

கடந்த சில வருடங்களாகவே விண்வெளியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது சீனா. தனக்கென தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை நிறுவும் முயற்சியில் பல காலமாகவே ஈடுபட்டுவந்தது. அந்தத் திட்டத்துக்கு தியான்குங் என்று பெயரிடப்பட்டிருந்தது. திட்டத்தில் ஒரு பகுதியாக இந்த தியான்குங்-1 ஆய்வுக்கூடம் கடந்த 2011-ம் வருடம் முதல் முறையாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு சொர்க்க அரண்மனை என்று மற்றொரு பெயரும் உண்டு. விண்வெளியில் நிரந்தரமாக ஒரு நிலையத்தை அமைக்கும் திட்டத்தில் இது முதல் படியாக பார்க்கப்பட்டது. தியான்குங்-1 8.5 டன் எடையும் 40 அடி நீளமும் கொண்டது. பூமியில் இருந்து அனுப்பப்படும் மற்ற பாகங்களை இதனுடன் படிப்படியாக இணைத்து 60 டன் எடை கொண்ட ஒரு முழுமையான விண்வெளி நிலையத்தை உருவாக்குவதுதான் சீனாவின் திட்டம். இந்தப் பணிகளை 2020-ம் ஆண்டில் முடித்துவிட திட்டமிட்டிருந்தது. இந்த விண்வெளி நிலையம் செவ்வாய்க் கிரகம் மற்றும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முக்கிய பங்காற்றும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது சீனா.

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு சிறப்பாகவே செயல்பட்டுவந்தது தியான்குங்-1 ஆய்வுக்கூடம். கடந்த 2013-ம் ஆண்டில்கூட 3 விண்வெளி வீர்ர்கள் இந்த ஆய்வுக்கூடத்துக்குச் சென்று வந்தனர். அதன் பிறகு 2016-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி திடீரென கட்டுப்பாட்டு அறையுடானான தொடர்பை இழந்தது தியான்குங்-1. தொடர்பை இழந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என அறிக்கை வெளியிட்டது சீனா. அதன் பிறகு எவ்வளவு முயற்சி செய்தும் அதைத் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே, தியான்குங்-1-ன் இழப்பைச் சமாளிக்க ஆறு மாதங்கள் கழித்து 2016 செப்டம்பர் 15-ல் தியான்குங்-2 என்ற மற்றொரு ஆய்வுக்கூடத்தை விண்ணில் ஏவியது சீனா.

பாதிப்பு ஏற்படுத்துமா தியான்குங்-1

கட்டுப்பாட்டை இழந்த பிறகு அது நிலை நிறுத்தப்பட்ட உயரத்திலிருந்து படிப்படியாக உயரம் குறையத் தொடங்கியது தியான்குங்-1. 2016-ம் ஆண்டு மார்ச்சில் 346 கிலோமீட்டராக இருந்த இதன் உயரம் தற்பொழுது 268 கிலோமீட்டராக குறைந்துள்ளது. இந்த வேகத்தில் கீழே விழுந்தால் அடுத்த மார்ச் மாதத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையலாம் என்று கணித்திருக்கிறார்கள். இது பூமியில் நுழைவதால் ஆபத்து ஏற்படுமா என்ற கேள்விக்கு "வானிலோ அல்லது தரையிலோ பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு என்பது சிறிய அளவில் இருக்கிறது" என்கிறது சீனா. 8.5 டன் எடை இருந்தாலும் அது வளிமண்டலத்தில் நுழையும்பொழுது உருவாகும் வெப்பத்தால் அது எரிந்துவிடும் வாய்ப்புகளே அதிகம்.

ஆனால், இதிலிருக்கும் Hydrazine என்ற எரிபொருள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. இதன் பாகங்களால் பாதிப்பு ஏற்படுவது குறைவு என்றாலும் அதில் மிச்சமிருக்கும் எரிபொருளால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படலாம் என்கிறார்கள் ஒரு சிலர்.

இதற்கு முன் ரஷ்யாவின் சல்யூட் 7 விண்வெளி நிலையமும் நாசாவின் ஸ்கைலேப் விண்வெளி நிலையமும் விழுந்து நொறுங்கியுள்ளன. இந்த இரண்டு சம்பவங்களின்போதும் அந்த செயற்கைகோளின் சில பொருள்கள் பூமியில் வந்து விழுந்தன. இதுபோன்ற செயற்கைக்கோள் பாகங்கள் பூமியில் விழுவது தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இதுபோன்ற நிகழ்வுகளில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக இதுவரை பதிவு செய்யப்படவில்லை. தியான்குங்-1 பாதிப்பை ஏற்படுத்துமா, சீனா என்ன செய்யவிருக்கிறது போன்றவற்றை, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.