100 கோயில்களில் அன்னதானம்; பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு

100 கோயில்களில் அன்னதானம்; பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு

Published:Updated:
100 கோயில்களில் அன்னதானம்; பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு
100 கோயில்களில் அன்னதானம்; பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு
0Comments
Share
100 கோயில்களில் அன்னதானம்; பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு

சென்னை: 100 திருக்கோயில்களுக்கு இந்த ஆண்டில் அன்னதானம் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் நடப்பாண்டில் 1006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குட முழுக்கு நடத்தப்படும் என்றும் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 1,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர்  ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் கூறியிருப்பதாவது

மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றவுடன், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகியவற்றிற்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள் முழுதும் அன்னதானம் வழங்கும்  திட்டத்தை துவக்கி வைத்தேன். தற்போது 518 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் சீரோடும், சிறப்போடும் செயல்பட்டு வருகிறது.  பக்தர்களின் வருகையையும், தேவையையும் கருத்திற் கொண்டு இத்திட்டம் மேலும் 100 திருக்கோயில்களுக்கு இந்த ஆண்டில் விரிவுபடுத்தப்படும். இதற்காக  2 கோடியே 37 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் செலவினம் ஏற்படும்.

ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் வளமிக்க தமிழ் மொழியில்  இறைவனை போற்றி  பாடப் பெற்ற நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் பன்னிரு திருமுறைகள் ஆகிய பாடல்களை  பக்தர்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், ஸ்ரீரங்கம், அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ஆழ்வார்கள் பாடல்கள் அடங்கிய கல்வெட்டு நந்தவனமும், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் நாயன்மார்களின் பாடல்கள் அடங்கிய கல்வெட்டு நந்தவனமும், சிறப்புற அமைக்கப்படும்.

1006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குட முழுக்கு

ஆகம விதியின்படி திருக்கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் திருப்பணி செய்து குட முழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 2011-2012ஆம் ஆண்டில் 1006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குட முழுக்கு நடத்தப்பட்டது. அதே போன்று, 2012-2013 ஆம் ஆண்டிலும் 1906 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குட முழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது. நடப்பாண்டில் மேலும் 1006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குட முழுக்கு நடத்தப்படும்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அமையப் பெற்றுள்ள திருக்கோயில்கள், பல இடங்களில் கட்டுமானங்கள் நிறைவு பெறாமலும், மிகவும் சிதிலம் அடைந்த நிலையிலும் உள்ளன என்ற செய்தி எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.  இதை அறிந்த நான் கடந்த  2011-2012 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கென திருக்கோயில் ஒன்றுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்  தொகையை  25,000 ரூபாயிலிருந்து  50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டேன். அதன் பயனாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும்  ஆதிதிராவிட மக்கள் வாழும் 624 பகுதிகளில் உள்ள திருக்கோயில்கள் பயனடைந்துள்ளன. நடப்பாண்டிலும், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட திருக்கோயில் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் 1006 திருக்கோயில்களுக்கு 5 கோடியே 3 லட்சம் ரூபாய்  நிதியுதவி செய்யப்படும்.

##~~##
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறு  திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்வதற்காக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 50,000 ரூபாயாக  உயர்த்தி வழங்கப்பட்டது.  இதன் மூலம்,  இதுவரை 300 திருக்கோயில்கள் பயன் பெற்றுள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மேலும் பல சிறு  திருக்கோயில்கள் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு,  இவ்வாண்டு மேலும் 1006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட திருக்கோயில் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வீதம்  5 கோடியே 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
திருக்கோயில்களுக்குச் சொந்தமான உலோகத் திருமேனிகள், ஆபரணங்கள் மற்றும் விலை  உயர்ந்த பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, திருக்கோயில்களில் களவு எச்சரிக்கை மணி, கண்காணிப்பு கேமிரா ஆகியன பொருத்தவும் அங்குள்ள பாதுகாப்பு அறைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ள திருக்கோயில்களில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள் தற்போது திருவாரூர், கும்பகோணம், திருச்சி,  திருநெல்வேலி, காஞ்சிபுரம் போன்ற 19 இடங்களில் உள்ள பாதுகாப்பு மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பல திருக்கோயில்களில் பூஜையில் இல்லாத உலோக விக்கிரகங்களும், பயன்பாட்டில் இல்லாத ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களும் பாதுகாக்கப்படும்  வகையில், கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,  நாமக்கல், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம் 5 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
பூசாரிகளுக்கு ஓய்வூதியம் 1000 ஆக உயர்வு
இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணி புரிந்து 60 வயதினை நிறைவு செய்து ஓய்வு பெற்ற 2819 பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 750 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 84 லட்சத்து 57ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
திருக்கோயில்களில் 10 ஆண்டிற்கு குறைவாக பணியாற்றிய ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் "துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டம்" என்ற திட்டத்தை அரசு ஏற்படுத்தியது.    இத்திட்டத்தின் கீழ் தற்போது 3183 ஓய்வு பெற்ற பணியாளர்கள் மாத  ஓய்வூதியமாக தலா 800 ரூபாய் பெறுகின்றனர். இந்த ஓய்வூதியம் 1,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 76 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 490 திருக்கோயில்கள், ஒரு பெண்கள் கல்லூரி, ஒரு மேல்நிலைப்பள்ளி, இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றை செம்மையாக நிர்வகிக்க போதுமான நிதி வசதி இல்லை என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.  இந்த நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிதி இடர்பாடுகளை களைந்து செம்மையான நிர்வாகத்தை மேற்கொள்ள தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும் 1 கோடி ரூபாய் மானியம் 3 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். தொன்மை மிகு திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாது புதுப்பிக்க பதின்மூன்றாவது நிதி ஆணையத்தின் ஒதுக்கீட்டின் கீழ் 2011-2012 ஆம் ஆண்டு 94 திருக்கோயில்களுக்கு 22 கோடியே 50 லட்சம் ரூபாயும்,  2012-2013ஆம்  ஆண்டிற்கு  43 திருக்கோயில்களுக்கு   22 கோடியே 50 லட்சம் ரூபாயும் என மொத்தம் 45 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 49 தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாது புதுப்பிக்க  22 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் உள்ள இரணியல் கிராமத்தில் 2.43 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை பாதுகாக்கும் வகையில்,  இந்த அரண்மனைக் கட்டடத்தை அனுபவம் வாய்ந்த தொல்லியல் வல்லுநர்கள் உதவியுடன் புதுப்பிக்க 3 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுமார் 50 திருக்கோயில்களில் உள்ள பழமையான ஓவியங்கள் பல இடங்களில் போதிய பராமரிப்பின்றி மிகவும் சிதிலம் அடைந்து அழிவுறும் அபாயம் உள்ளது என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பழமையான ஓவியங்கள்  தொல்லியல் துறை வல்லுநர்களையும் தொல்லியல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற வேதியியல்  நிபுணர்களையும் கொண்டு பழமை மாறாது புதுப்பித்துப் பராமரிக்கப்படும். முதற்கட்டமாக, கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையசுவாமி திருக்கோயில் ஏழு நிலை இராஜகோபுரத்தில் அமைந்துள்ள சுவர் ஓவியங்களை அதன் பழமை மாறாது புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.