``எச்சரிக்கை... இது எறும்புகளின் போர்க்களம்!" - சிற்றுயிர்களில் ஒரு கிளாடியேட்டர்

காயமடைந்த பலர் கிடந்தனர். அவர்கள் ஒளிவீச மாட்டார்கள். தன் உயிரைக் காப்பாற்ற முடியுமென்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே ஒளிவீசி உதவி கேட்பார்கள். உயிர்போகும் அளவுக்குக் காயமடைந்தவர்கள் அப்படிச் செய்து மற்றவர்களுக்கு வீண் வேலை வைக்கமாட்டார்கள். இது அவர்களின் அறம்.

Published:Updated:
``எச்சரிக்கை... இது எறும்புகளின் போர்க்களம்!" - சிற்றுயிர்களில் ஒரு கிளாடியேட்டர்
``எச்சரிக்கை... இது எறும்புகளின் போர்க்களம்!" - சிற்றுயிர்களில் ஒரு கிளாடியேட்டர்
0Comments
Share

ணி நள்ளிரவு 1:30.

படைத்தளபதியும் அரசனும் ஏதோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசுவதை வைத்தே அந்தத் தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.

``அவர்கள் இந்த நள்ளிரவில் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று சமாளிக்கிறார் படைத்தலைவர். 

அரசருக்கோ ஆத்திரம் தாங்கவில்லை, ``ஏன் இதற்குமுன் அவர்கள் நள்ளிரவில் தாக்கியதே இல்லையா! மிக இக்கட்டான சூழலில் அவர்கள் இதைத்தானே இதற்கு முன்னும் செய்துள்ளார்கள்"

``ஆம், அதைப்பற்றி நான் சிந்திக்கவில்லை" என்று தலைகுனிகிறார் படைத்தளபதி. ``கடந்த இரண்டு நாள்களாக நாம் அவர்களைத் தடுத்துக் கொண்டே இருக்கிறோம். நம் குடிகளைச் சாப்பிடவிடாமல் தற்காத்துள்ளோம். அடுத்து இதைத்தவிர வேறு எதைச் செய்துவிடப் போகிறார்கள். இதைக்கூடத் தெரிந்து வைத்திராத உம்மைப் படைத்தளபதியாக நியமித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்" 

பொரிந்து தள்ளிய அரசர் யோசனை கூறினார், ``வேறுவழியில்லை. அவர்கள் பசிக்காகப் போர் புரிகிறார்கள். நாம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறோம். நம் குடிகளில் பலசாலிகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துப் போருக்கு அனுப்புங்கள். என்ன ஆனாலும், நம் புற்றைக் காப்பாற்றியே ஆகவேண்டும்!"

நிலைமை கைமீறிப் போயிருந்தது. ஏற்கெனவே அந்த மெகாபொனேரா எறும்புகள் புற்றுக் காவல் வீரர்களைத் தாக்கி உள்ளே நுழைந்துவிட்டனர். அவர்களைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கறையான் புற்றுக்குள் அனைவரும் இப்படிப் போர்புரியும் குணங்களோடு இருப்பதில்லை. படைவீரர்கள் தனி, உணவு தேடும், புற்றுகட்டும் அதைப் பராமரிக்கும் குடிமக்கள் தனி. ஆனால், மெகாபொனேரா எறும்புகள் அப்படியல்ல. அவர்கள் அனைவருமே போர்வீரர்கள். சொல்லப்போனால் வேட்டைக்காரர்கள். ஆக்ரோஷமாகத் தாக்கித் தன் இரையை வீழ்த்தி ருசிக்கும் இயல்புடையவை. அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம் போர் போர் போர். 

Photos Courtesy: Erik.T.Frank

காயமடைந்தவர்களைக் கொண்டு செல்லும் ஒரு மெகாபொனேரோ எறும்பு

அப்படிப்பட்டஎதிரிகளைச் சமாளிப்பது அசாதாரணமான காரியம். அந்த அசாதாரணமான ஒன்றைத்தான் ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதிகளில் வாழும் கறையான்கள் தினமும் செய்து கொண்டிருக்கின்றன. அன்றும் அப்படியொரு போர்தான். வழக்கமாக அதிகாலை 6 மணிமுதல் 10 மணிக்குள் தம் தாக்குதலை முடித்துக்கொண்டு கிளம்பிவிடும். அதுவும் போதவில்லை என்றால் மாலை 3 மணிமுதல் 7 மணிவரை மீண்டும் போர் நடக்கும். இந்த இரண்டு போருமே தங்களுக்குப் பின்னடைவைத் தந்தால் மட்டுமே இரவுப் போர். யாருக்கும் தெரியாமல் தந்திரமாகத் தாக்கத் தொடங்குவார்கள். அவர்களின் அணிவகுப்பே கறையான்களால் உடைக்க முடியாத வலிமை மிக்கதாக இருக்கும். வியூகங்கள் மனிதர்களின் போர் வியூகங்களுக்கு நிகரானவை. அப்படிப்பட்ட வலிமையான எதிரிகளை தினம் தினம் எதிர்த்தே உயிர் வாழ்கின்றன அந்தக் கறையான் கூட்டங்கள். ஒவ்வொரு கறையான் கூட்டத்திலும் லட்சக்கணக்கான குடிகள் வாழ்வார்கள். இப்படியொரு இக்கட்டான வாழ்வை வாழ்வதற்கும் தங்கள் இனமே அழிந்துபோகாமல் பாதுகாக்கவும் ராணிக் கறையான்தான் மூலம். ஆண்டுக்குச் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமாக முட்டையிடுபவர். அவரைப் பாதுகாத்தாக வேண்டும்.

அன்று நடந்து கொண்டிருந்த போர் வழக்கத்தைவிட அதிகச் சேதங்களை விளைவித்துவிட்டது. இரண்டு பக்கமும்தான். இருந்தாலும் எறும்புகள் பின்வாங்குவதாக இல்லை. அவை எப்படியாவது ராணியைக் கைப்பற்றியாக வேண்டும். அப்போதுதான் அவளிடம் இருக்கும் லட்சக்கணக்கான முட்டைகள் கிடைக்கும். அதற்குத்தான் முயன்று கொண்டிருந்தார்கள். இவர்களின் நோக்கம் தெரிந்ததும் கறையான் காலனியைச் சேர்ந்த அனைத்து ஆண்களுமே சண்டையிட வந்துவிட்டார்கள். கிட்டத்தட்டக் குடிமக்களின் துணையோடு நடந்த ஸ்டாலின்கிராட் போர் போலவே மற்றுமொரு ஆக்ரோஷமான போர் அங்கு நடந்தது. மொத்தக் கறையான்களும் போரில் இறங்கினார்கள். எறும்புகள் பக்கம் அதிகச் சேதம். அதிகமானோர் காயமடைந்து விட்டனர்.

தலைமைத் தளபதி உயர்வான இடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். திரும்பிய திசையெல்லாம் பட்டொளி வீசிக்கொண்டிருந்தது. அவருக்குப் புரிந்துவிட்டது. தன் தரப்பில்தான் சேதம் அதிகமென்று. எறும்புப் படையில் ஒருவர் காயமடைந்து வீழ்ந்தால், தன்னை நோக்கிக் கவரும் விதமாக ஒளிவீசி சிக்னல் கொடுப்பார். தங்களுள் ஒருவன் வீழ்ந்துவிட்டான் அவனைக் காப்பாற்றச் செல்ல வேண்டுமென்று மற்ற வீரர்களுக்குத் தரும் எச்சரிக்கைதான் அந்த ஒளி. அருகிலிருப்பவர்கள் வந்து உதவி செய்வார்கள். அங்கிருந்து தம் இடத்துக்குக் கொண்டு செல்வார்கள். ஒருவேளை உதவிக்கு யாரும் வரவில்லையா! அப்படியொரு இக்கட்டான சூழல் ஏற்பட்டால் அப்போதும் அவர்கள் வெளியிடும் அந்த ஒளிதான் உதவுகிறது. காயம் அடைந்தவர்கள் வெளியிடும் பட்டொளியை வைத்து மற்ற காயமடைந்த வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்கிறார்கள். அனைவரும் இணைந்தபின் ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து ஒரே நேர்கோட்டில் தங்கள் புற்றுக்குச் செல்ல முயல்கிறார்கள். அந்தச் சமயத்தில் சண்டையிடும் எறும்புகள் அவர்களுக்கு வழிவிட்டு யாரும் தாக்காத வண்ணமும் பார்த்துக்கொள்கின்றன.

தன் எச்சிலால் காயத்தைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறது

அப்படியாகத் தன் படையில் காயமடைந்த வீரர்கள் முழுமையாகத் தப்பித்த பின்னர்தான் தளபதி கவனித்தான். அங்கு இன்னும் காயமடைந்த பலர் கிடந்தனர். அவர்கள் ஒளிவீச மாட்டார்கள். தன் உயிரைக் காப்பாற்ற முடியுமென்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே ஒளிவீசி உதவி கேட்பார்கள். உயிர்போகும் அளவுக்குக் காயமடைந்தவர்கள் அப்படிச் செய்து மற்றவர்களுக்கு வீண் வேலை வைக்கமாட்டார்கள். இது அவர்களின் அறம். மனிதர்களில் ஒருவருக்குச் சிகிச்சை வேண்டுமா என்பதை மருத்துவர்தான் முடிவு செய்யவேண்டும். ஆனால், அவர்களில் அப்படியே தலைகீழாக நடக்கும். தன்னால் பிழைக்க முடியுமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள். ஏனென்றால் தன் உயிர் மீதான அக்கறை தன்னைவிட வேறு எவருக்கும் இருந்துவிடாது. தனக்கே பிழைக்க முடியுமென்ற நம்பிக்கை போய்விட்டால் எப்பேர்ப்பட்ட சக்தியாலும் தன்னைக் காப்பாற்ற முடியாது. அந்தத் தத்துவத்தை முழுமையாகப் புரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

மரணிக்கும் தறுவாயில் இருந்தவர்களைக் கவலையோடு பார்த்துவிட்டு மற்ற வீரர்களையும் பின்வாங்குமாறு மெகாபொனேரா எறும்புப் படையின் தலைமைத் தளபதி உத்தரவிட்டான். அனைவரும் பின்வாங்கினார்கள். தங்கள் படைவீரர்களைத் தூக்கிச்செல்ல வந்த மருத்துவர்களுக்கும் உதவினார்கள். காயமடைந்த வீரர்களைச் சுமந்துகொண்டு மருத்துவர்களும் மற்ற வீரர்களும் தங்கள் இடத்தை அடைந்தனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த கால்களைக் கீழ்தாடைகளாலும் முன்னங்கால்களாலும் பிடித்துக் கொண்டு காயங்களை நக்கி நக்கிச் சுத்தம் செய்தனர். அதற்குப் பின் இடைவெளிவிட்டு மீண்டும் சுமார் 4 நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாக நக்கித் தங்கள் எச்சிலில் காயங்களை ஊறவைத்தனர். காயங்கள் சிறிது சிறிதாகக் குணமடையத் தொடங்கின. தலைமைத் தளபதி மீண்டும் மேடையில் ஏறினான்.

``கறையான்களைச் சும்மாவிடக் கூடாது. ஒருவரையும்கூட விடாமல் மொத்தமாகச் சாப்பிட்டு விடுங்கள். போருக்குச் செல்வோமா...!" என்று உரக்கக் கத்தினார். அனைத்து எறும்புகளும் உடனே கூச்சலிடத் தொடங்கின.

``ஒன்றையும் விடக்கூடாது..." ``மீண்டும் போர்..."

காயமடைந்த வீரனுக்கு மருத்துவம் பார்க்கும் மற்றொரு படைவீரன்

இயற்கை ஒவ்வோர் உயிருக்கும் உணவைத் தேடிக் கொள்ளவும், அதற்கு உணவாக அமையும் உயிர்களுக்குத் தங்களைத் தற்காத்து உயிர் பிழைத்திருக்கவும் தேவையான திறன்களை வழங்கியுள்ளது. அந்தப் படைப்புகளில் ஒன்றுதான் இந்த ஆப்பிரிக்கக் கறையான்களும் மெகாபொனேரா எறும்புகளும். ஆனால், மனிதனல்லாத மற்ற உயிர்களில் போருக்குப் பின்னர் காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதும் பேணுவதும் இந்த எறும்புகளில்தான் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

``எறும்புகள் தங்கள் கூட்டத்தாரைக் காப்பாற்ற நுட்பமான மருத்துவ முறைகளைக் கையாள்வதும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதும் நர்ஸிங் செய்வதும் நான் இதுவரை பார்த்திராத செயல்கள்" என்று இதைக் கண்டுபிடித்தபோது ஆச்சர்யப்பட்டார் ஃபிராங்க்.

இதை மேலும் ஆய்வுசெய்ய ஓர் எறும்புப் புற்றுக்குள் அகச்சிவப்புக் கதிர்களில் (Infrared Rays) பதிவாகும் கேமராக்களைப் பொருத்தினார்கள். அப்போதுதான் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கமுடியும். படைவீரர்கள் போர் முடிந்து திரும்பி வந்தார்கள். காயம் பட்டவர்களையும் உடன் தூக்கிவந்தனர். உள்ளே கொண்டு வந்ததும், அடிபட்ட இடங்களைக் கவனமாக ஆராய்ந்து புரிந்துகொள்ள முயன்றார்கள். தங்கள் உணர்கொம்புகளைப் பயன்படுத்திக் காயத்தைப் பரிசோதித்தார்கள். வேளைக்குக் குறைந்தது இரண்டு முறையாவது இந்தப் பரிசோதனை நடக்கும். இதைப் பரிசோதனைகளைச் செய்யாமலே சில எறும்புகளைத் தனிமையில் விட்டுப் பார்த்தார்கள். அதில் 80 சதவிகிதம் ஒருநாள் கூடப் பிழைக்கவில்லை. அப்போதுதான் புரிந்தது எறும்புகளைச் சாகவிடாமல் பார்த்துக்கொள்ளவே அவ்வப்போது பரிசோதித்து வைத்தியம் செய்கின்றன என்பது. முறையாக வைத்தியம் செய்தபோது பத்தில் ஒன்றுதான் உயிரிழந்தது. வைத்தியமின்றி மரணித்த வீரர்களை ஆய்வு செய்தபோது காயங்களில் ஏற்பட்ட கிருமித் தொற்றுதான் காரணமென்று தெரிந்தது. காயங்களில் தொற்று ஏற்படாமல் காப்பாற்றவே அவை எச்சிலால் அதைச் சுத்தம் செய்துகொண்டே இருக்கின்றன.

வெற்றிவாகை சூடித் தன் உணவுகளோடு திரும்புகிறார்கள்

மனிதர்களைவிட மற்ற உயிரினங்கள் எவ்வளவு மேலானவை என்பதைத்தான் அத்தனை ஆய்வுகளும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. தனக்கான பாதையை, தன்னுடைய உயிரை, தன்னுடைய வாழ்நாளைத் தானே முடிவு செய்துகொள்ள வேண்டுமென்ற பட்டறிவு நம்மைவிட அவற்றுக்கு அதிகமாகவே இருக்கிறது. தங்களின் தேவைகளையும் உரிமைகளையும் போராடியேனும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் இயற்கை சொல்கிறது. அந்தப் போராட்டம் இல்லையேல் அடிமைகளாகத்தான் வாழவேண்டும். அப்படிப்பட்ட அடிமைகளைவிடப் பற்பல இழப்புகளைக் கடந்தும் எதிர்த்து நிற்கும் கறையான்களும், போராடி உயிர்த்தியாகம் செய்யத் தயங்காத மெகாபொனேரா எறும்புகளும் உயர்ந்தவைதாம். தன்னிடமுள்ள ஒற்றை உயிரையும் தனக்காக மட்டுமன்றித் தன் மொத்தக் கூட்டத்துக்காகவும் தரத் தயாராக இருக்கும் இவைதான் உண்மையான கிளாடியேட்டர்கள்.