தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்

11,000 கி.மீ... தனியே தன்னந்தனியே பயணம்! - லட்சுமி

பெண்ணால் முடியும்

Published:Updated:
லட்சுமி
லட்சுமி
Comments
Share

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி, தனியாளாக பாலக்காட்டிலிருந்து தனது பைக்கில் 11,000 கி.மீ பயணித்து இமயம் தொட்டுத் திரும்பியிருக்கிறார். சாதாரண நாள்களிலேயே இந்தப் பயணத்தை மேற்கொள்வது எளிதான காரியமில்லை. பெருமழை, வெள்ளம், காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் போன்ற சம்பவங்கள் பல நிறைந்த பரபரப்பான, பதற்றமான சூழ்நிலையில் ஓர் அசாத்திய பயணத்தை முடித்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் லட்சுமி. ஒரு முன்பகல் நேரத்தில் லட்சுமியைச் சந்தித்தோம்.

லட்சுமி
லட்சுமி

“அப்பா, அம்மா, பாட்டி... இதுதான் எங்க குடும்பம். அம்மா காவல்துறையிலே இருந்தாங்க. அவங்க வேலை விஷயமா அடிக்கடி வெளிநாட்டுக்குத் தனியாளா போயிட்டு வருவாங்க. அப்போல்லாம் சாக்லேட், பொம்மைனு அம்மா வாங்கிட்டு வர்றதைப் பார்க்கிறப்ப எல்லாம் நானும் தனியாளா வெளிநாட்டுக்குப் போகணும்னு ஆசைப்படுவேன். அம்மாதான் என் இன்ஸ்பிரேஷன். நான் அஞ்சாவது படிக்கிறப்ப அம்மா தவறிட்டாங்க. அப்புறம் பாட்டிதான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க.

பத்தாவதுல நல்லா படிச்சதுனால அப்பா எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கித் தந்தார். பள்ளிப்படிப்பை பாலக்காட்டிலும் கல்லூரிப் படிப்பைக் கொடைக்கானலிலும் முடிச்சேன். கல்லூரி காலத்துல என் ஸ்கூட்டியிலேயே பாலக்காடு டு கொடைக்கானல் வரை டிராவல் பண்ணியிருக்கேன்.

படித்து முடிஞ்சதும் வேலைக்காக சென்னை போனேன். அங்கே ஏழு வருஷம் பல ஐ.டி கம்பெனிகள்ல வேலை பார்த்தேன். பாட்டிக்கு உடம்பு சரியில்லாம போனதால மறுபடியும் பாலக்காட்டுக்கே வந்துட்டேன்.

லட்சுமி
லட்சுமி

ஒரு ஐ.டி கம்பெனில வொர்க் ஃப்ரம் ஹோம் முறையிலே வேலை பார்க்க ஆரம்பிச்சேன். ஒருமுறை ஆக்ஸிடென்ட் ஆனதால, பழைய ஸ்கூட்டியைக் கொடுத்துட்டு பல்சர் வாங்கினேன். புது வண்டியை ரொம்ப தூரம் ஓட்டணும்னு ஆசை வந்தது. அதுக்காகவே அடிக்கடி பல்சரை எடுத்துட்டு நிறைய இடங்களுக்குப் போக ஆரம்பிச்சேன். அப்படி ஒருதடவை வெளியே போயிருந்தப்ப, பாட்டி இறந்துட்டாங்க'' என்கிறவர், தன் பாட்டியின் நினைவுகளிலிருந்து வெளியே வர மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

``எங்கே பார்த்தாலும் பாட்டியோட நினைவுகள். அப்போல்லாம் உடனே பல்சரோட வெளியே கிளம்பிடுவேன். அந்தப் பயணங்கள்தாம் என்னை அமைதியாக்குச்சு. ஒருமுறை கோவாவுக்குப் போனேன். அடுத்ததா வாகமன் ட்ரிப். அதை வீடியோ எடுத்து டிக்டாக்ல போட்டப்ப, `இதுக்கு ஏன் இவ்வளவு சீன்? நாங்க எல்லாம் லடாக் வரைக்கும் பைக்லேயே தனியாளா பயணிச்சிருக்கோம்'னு சில ஆண்கள் கமென்ட் போட்டாங்க. அப்பதான், `நம்ம ஏன் லடாக் போகக் கூடாது'ன்னு நெனச்சி, அப்படி அங்கே போயிட்டு வந்த ஒருவரைச் சந்திச்சேன்.

லட்சுமி
லட்சுமி

`ரோடெல்லாம் கரடுமுரடா இருக்கும். ஆபத்தான பாதை, மக்கள் நடமாட்டமே பல இடங்கள்ல இருக்காது'ன்னு சொன்னார் அவர். அப்பவே லடாக் போகணும்னு முடிவு செய்தேன். காசு முக்கியம் என்கிறதால, வேலை பார்த்துட்டே பயணம் செய்ய திட்டமிட்டேன். இதை என் ஆபீஸ் மேனேஜர்கிட்ட சொன்னதும் கிரீன் சிக்னல் கொடுத்தார்'' என்கிறவர், தன் பைக் பயண நாள்கள் பற்றிச் சொல்கிறார்.

``தேவைக்கு உடை, பணம், லேப்டாப், செல்போன், சார்ஜர், டென்ட், தண்ணீர் பாட்டில், பைக் டேங்க் முழுக்க பெட்ரோல், பாதுகாப்புக்கு ஒரு பெப்பர் ஸ்பிரே... இவ்வளவுதான் என் லக்கேஜ். `காஷ்மீர் போறேன், வர்றதுக்கு 45 நாள்கள் ஆகும்'னு அப்பாக்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.

வீட்லேருந்து கிளம்பி மங்களூர் போகிற வரைக்கும் டிக்டாக்ல தொடர்ந்து வீடியோ போட்டுட்டே இருந்தேன். மங்களூர்ல என்னை வரவேற்க என் டிக்டாக் ஃபாலோயர்ஸ் காத்திருந்தது பெரிய சர்ப்ரைஸா இருந்தது. தினமும் ஒரு சிட்டியிலிருந்து இன்னொரு சிட்டிக்குப் போயிடுவேன். அங்கு ஏதாவது நல்ல ஹோட்டல்ல ரூம் போடுவேன். மாலையானதும் வேலை பார்க்க ஆரம் பிச்சிடுவேன்.

லட்சுமி
லட்சுமி

வேலை முடிய அதிகாலை நாலரை மணி ஆகிடும். ஒன்பதரை மணி வரைக்கும் தூக்கம். அப்பறம், பத்தரை மணிக்கு எழுந்து மறுபடியும் பயணம். இடையில மழை, வெள்ளம் வந்தபோது சில நாள்கள் பயணத்துக்குத் தடை விழுந்துச்சு. நான் பயணத்தில் இருப்பது சமூக வலைதளங்கள் மூலம் தெரிஞ்சதுனால பலர் என்னை வழிநடத்தினாங்க.

நடுவுல, கேரளாவுல இருந்து லடாக் போகிற ஒரு டீமைச் சந்திச்சேன். ஸ்ரீநகர் வழியா லடாக் போறதுதான் என் பிளான். ஆனா, நிலைமை சரியில்லாததால, மணாலி வழியா போறதுதான் பெஸ்ட்னு அவங்க ஐடியா கொடுத்தாங்க. அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கினேன். வழியில கிடைக்கும் உணவை ரசிச்சு சாப்பிட்டேன்.

ராஜஸ்தான், குஜராத், டெல்லின்னு நிறைய இடங்களைச் சுத்திப் பார்த்தேன். என் அம்மா டெல்லி கேட் முன்னாடி கம்பீரமா நின்னு ஒரு போட்டோ எடுத்திருப்பாங்க. அதே டெல்லி கேட் முன்னாடி அம்மா மாதிரியே நானும் ஒரு போட்டோ எடுத்தேன். டெல்லியில பைக் டயர் மாத்தி, ஒரு சர்வீஸ் பண்ணேன். அகமதாபாத்ல மீண்டும் கேரள டீமைப் பார்த்தேன். அங்கே இருந்து கொஞ்ச தூரம் அவங்களோடதான் பயணம்.

குலுவுக்குப் போறதுக்கு முன்னாடி செம மழை. காபி கலர்ல வெள்ளம் அடிச்சுட்டு போச்சு. ரெண்டு பக்கமும் முட்டி அளவுக்குத் தண்ணீல பைக் ஓட்டினதை மறக்க முடியாது.

எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் மணாலி. நாங்க போன நேரத்துல மழையினால சாலையை மூடிட்டாங்க. ஒரு வாரத்துக்கு மணாலியிலே ஹால்ட். அந்த டீம் ஆட்களும் அங்கே தங்கினாங்க. அப்புறம், திரும்பி லடாக் போற வழியில ஓர் இடத்துல சில பாறைகள் விழுந்துட்டே இருந்துச்சு.

அங்கே ஒரு சின்ன பள்ளமும் இருந்துச்சு. மத்தவங்க எல்லாம் ராயல் என்ஃபீல்டு மாதிரி பவரான பைக்ஸ் வெச்சிருந்தாங்க. அதனால அவங்க வண்டி ஈஸியா போயிடுச்சு. ஆனா, என் வண்டி அந்தப் பள்ளத்துல நின்னுடுச்சு. ஒருபக்கம் பாறை விழுந்துட்டிருக்கு. போலீஸ்காரங்க, `வண்டிய எடு, போ'னு கத்தறாங்க. எங்கேயிருந்து எனக்கு அந்தச் சக்தி கிடைச்சுதுன்னு தெரியல. ஒரே அழுத்தத்துல வண்டியைத் தள்ளி சேஃப் ஆகிட்டேன்.

வரலாற்றுப் புத்தகத்துல படிச்ச இடங்களை நேர்ல பார்க்கிறப்ப எழுந்த உணர்வை வார்த்தைகள்ல விவரிக்க முடியலை. லடாக் போனதை என்னால நம்பவே முடியலை. அங்கே போனதும் `சிங்கப் பெண்ணே' பாட்டுக் கேட்டு என்னை ரீசார்ஜ் பண்ணிக்கிட்டேன்'' என்று வெடித்து சிரிக்கிறார் லட்சுமி.

“பயணத்தை முடிக்க மனசில்லாம, பாலக்காடு வரை வந்துட்டு, திரும்பி ஊட்டி வரை போயிட்டு வந்தேன். இரண்டரை லட்சம் ரூபாய் செலவு. நான்கு முறை பைக் சர்வீஸ் செய்தேன். என்னைப்பத்தி கேள்விப்பட்ட அம்மா ஒருத்தர் என்னைக் கட்டியணைச்சுக்கிட்டாங்க. சின்ன வயதில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானவங்களாம். `அந்தப் பிரச்னைக்குப் பிறகு நான் வெளிய வர்றதையே நிறுத்திட்டேன். உன்னை மாதிரி ஒரு பொண்ணு எனக்கு மகளா பிறந்திருக்கணும்'னு அவங்க சொன்னப்ப நெகிழ்ந்து போயிட்டேன்.

என்னை மாதிரி உலகை தனியா சுற்றிப் பார்க்க பெண்கள் பெருமளவில் வரணும். இதுதான் என் நோக்கமா இருந்தது. அதுக்காகத்தான் வீடியோ போட்டேன். பயணங்கள் நம்மைப் பக்குவப்படுத்தும். உற்சாகம் கொடுக்கும். ஆகவே, பயணியுங்கள்” என்று நம்பிக்கையூட்டுகிறார் லட்சுமி!