கடன் முதல் விளம்பரம் வரை... தொழில்முனைவோர்களுக்கு 10 டிப்ஸ்!

உங்களுடைய தொழிலை கிரியேட்டிவாக செய்ய முற்படுங்கள். அப்போதுதான் வாடிக்கையாளர்களைக் கவர்வது எளிதாக இருக்கும். வழக்கமான பலசரக்குக் கடைகளிலிருந்து மாறுபட்டதே சூப்பர் மார்க்கெட் விற்பனையகம். இதுபோல எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதில் கிரியேட்டிவாக மாறுதலோடு செய்ய முயல வேண்டும்.

Published:Updated:
கடன் முதல் விளம்பரம் வரை... தொழில்முனைவோர்களுக்கு 10 டிப்ஸ்!
கடன் முதல் விளம்பரம் வரை... தொழில்முனைவோர்களுக்கு 10 டிப்ஸ்!
0Comments
Share

"எதாவது தொழில் தொடங்கணும்னு ஆசையா இருக்கு, ஆனா, சரியா வருமான்னு பயமாவும் இருக்கு." இந்தத் தயக்கத்தோடும், குழப்பத்தோடும் தொழிலில் இறங்குவதால்தான் பலராலும் திறமையாகச் செயல்படமுடியாமல், தன்னம்பிக்கை இழந்து வெளியேறிவிடுகிறார்கள். தொழில்முனைவோராவது குறித்த தெளிவான பார்வை இருந்துவிட்டால் தொழில் தொடங்குவது ஒன்றும் பெருஞ்செயல் அல்ல... சின்னச்சின்ன சூட்சுமங்களைப் புரிந்துகொண்டால் வெற்றி நிச்சயமே. திறமையாகச் செயல்பட உதவும் பத்து வழிமுறைகளை இங்கே காணலாம்.

வாடிக்கையாளர்களே முதன்மையானவர்கள்

உங்கள் தொழிலுக்கு முதலாளிகள், வாடிக்கையாளர்களே என்பது மகாத்மா காந்தியின் கருத்து. அது நூறு சதவிகிதம் உண்மை. வாடிக்கையாளர்கள் உங்களது சேவையில் குறைகூறுகின்றார்கள் எனில் தவறு உங்களிடம்தான் உள்ளது. வாடிக்கையாளர்களின் மனநிறைவுதான் தொழில் வெற்றிக்கு அடிப்படை. வாடிக்கையாளர்களைச் சம்பாதித்தாலே இலக்கில் பாதியை எட்டிவிட்டதாகக் கருதலாம். பின்னர் அவர்களைத் தக்கவைக்க வேண்டியது மட்டுமே உங்களது கடமையாக இருக்கும்.

தேவை எதுவென அறிதல்

எந்தவொரு தொழிலில் இறங்குமுன்னும் அதனை நடத்தத் தேவையான முக்கிய காரணிகள் எவை என்ற தெளிவு வேண்டும். முதன்மையான காரணி முதலீடு. முதலீட்டுக்கான வழிமுறைகள் என்னென்ன என்றும், எப்படி நிர்வகிப்பது என்றும் அறிந்திருக்க வேண்டும். வங்கிக்கடன் பெறுவதாக இருந்தால் தொழில் தொடங்குமுன்பே வங்கிகளை அணுகி, தொழிற்கடன் பெறுவதற்கான வாய்ப்பை உறுதிசெய்துகொள்ள வேண்டும். பொதுவாக, தொழில் தொடங்கும்போது நம்முடைய சேமிப்பிலிருந்து பெரும்பங்கு செலவிடுவது நல்லது. 

கிரியேட்டிவிட்டி அவசியம்

உங்களுடைய தொழிலை கிரியேட்டிவாக செய்ய முற்படுங்கள். அப்போதுதான் வாடிக்கையாளர்களைக் கவர்வது எளிதாக இருக்கும். வழக்கமான பலசரக்குக் கடைகளிலிருந்து மாறுபட்டதே சூப்பர் மார்க்கெட். இதுபோல எந்தவொரு தொழிலாக இருந்தாலும் அதில் கிரியேட்டிவாக மாறுதலோடு செய்ய முயல வேண்டும்.

முறைப்படி செயல்படுத்துங்கள்

உங்கள் தொழிலை முறையாகப் பதிவுசெய்து தொடங்குங்கள். பதிவுசெய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன, அதற்கான செலவு எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு இறங்க வேண்டும். தினசரி வரவு செலவுக் கணக்குகளை முறையான பில்லிங்கோடு நடைமுறைப்படுத்த வேண்டும். வரித்தாக்கல் செய்வதைத் தவறாமல் செய்ய வேண்டும். இப்படியான ஒளிவுமறைவற்ற முறையான செயல்பாடுதான் உங்களது தொழில் முயற்சியில் தன்னம்பிக்கையோடு இயங்க உதவும்.

தியாகம் செய்தல் வேண்டும்

ஒன்றைப் பெறவேண்டுமெனில் ஒன்றை இழக்க வேண்டும் என்பது பழமொழி. எனவே தொழில் வெற்றி என்ற இலக்கை எட்டுவதற்கு உங்களுடைய பொழுதுபோக்குகளிலிருந்து விலகியிருக்க வேண்டி வரலாம். குடும்பத்தோடும் நண்பர்களோடும் அதிக நேரம் செலவிட முடியாமல் போகலாம். அதற்கு நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையை வளப்படுத்துவதற்காகத் தனது தலைமுறையையே தியாகம் செய்தவர்களும் நம்மில் உண்டு. எனவே, உங்களுடைய இலக்குக்குத் தொடர்பில்லாத கேளிக்கைகளில் கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பது நல்லது. 

ரிஸ்க்குகளை அடையாளம் காணுங்கள்

உங்களுடைய தொழிலில் இருக்கும் ரிஸ்க்குகள் என்னவென்பதை அறிந்திருக்க வேண்டும். அதைத்தான் ஆழந்தெரியாமல் காலை விடாதே என்பார்கள். ரிஸ்க் எந்த அளவிற்கு உள்ளது என்பதைக் கணக்கிட முடிந்தால்தான் அதை எதிர்கொள்ளும் துணிவும், பண பலமும் நம்மிடம் இருக்கிறதா என்பதைக் கணக்கிட முடியும்.

போட்டியாளர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

உங்களுடைய போட்டியாளர்கள் யாரென்றும், அவர்களின் திறன், மார்க்கெட்டிங் ஏரியா உள்ளிட்ட அனைத்தையும் அலசி ஆராய வேண்டும். அப்போதுதான் அவர்களின் போட்டியைச் சமாளிக்கும் உத்திகளை வகுக்க முடியும்.

தொடர்ச்சியான செயல்பாடு தேவை

எந்தவொரு தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றிகரமாகச் செயல்பட சிறிது காலம் பிடிக்கும். திரைப்படங்களில் ஒரு பாட்டிலேயே ஹீரோ பெரிய வெற்றியைப் பெறுவதுபோல எதார்த்த வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியாது. அதிக உற்பத்தி, திறமையான தொழிலாளர்கள், நிறைய வாடிக்கையாளர்கள், பெரிய இலக்கு என ஒவ்வொரு நிலையையும் எட்டுவது சட்டென நிகழ்வதல்ல. தொழிலில் பின்னடைவோ, ஏற்றஇறக்கமோ ஏற்பட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து இலக்கை நோக்கிச் செயல்பட வேண்டும். நமக்கான நீரூற்று எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்று தெரியாதவரை தோண்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். எக்காரணத்தைக்கொண்டும் முயற்சியைப் பாதியில் கைவிடக்கூடாது.

கற்றல் அவசியம்

தொழில் வெற்றியென்பது அனுபவத்தால் மட்டுமே விளைவதல்ல, தொழில் தொடர்பான நூல்களைக் கற்றுத் தெளிவதும் அவசியம். இணையத்தை முறையாகப் பயன்படுத்தினால் நிறையக் கற்றுக்கொள்ளலாம். இது நம்மை மேலும் வலுவாகவும், தெளிவோடும் செயல்படவைக்கும். தொழில் மேம்பட மேம்பட நமது தொழில் அறிவும் மேம்படுவது மிகவும் அவசியம்.

விளம்பரம் செய்வீர்

விளம்பரம் என்றதும் தொலைக்காட்சி விளம்பரம் அளவிற்கு பெருஞ்செலவு பிடித்ததென்று நினைக்க வேண்டாம். பொதுவாக அனைத்துத் தொழில்களுக்கும் வாடிக்கையாளர்கள்தான் முதல் விளம்பரமே. வாடிக்கையாளர்களின் வாய்வழிச்செய்தியாகத்தான் நிறைய வாடிக்கையாளர்களைச் சுலபமாகப் பிடிக்க முடியும். நம்முடைய தரமான செயல்பாடுதான் இந்த விளம்பரத்துக்கு அடிப்படை. அதற்கு மேலே அந்தந்த தொழிலைப் பொறுத்துத்தான் விளம்பரத்தைத் தீர்மானிக்க முடியும்.