ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அவதூறு வழக்கை திரும்பப் பெற அனில் அம்பானி முடிவு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதாக அனில் அம்பானி முடிவு எடுத்துள்ளார். 
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அவதூறு வழக்கை திரும்பப் பெற அனில் அம்பானி முடிவு


ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதாக அனில் அம்பானி முடிவு எடுத்துள்ளார். 

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. போர் விமானங்களை அதிக விலைக்கு வாங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் பிரதமருக்கு நெருக்கமான தொழிலதிபரான அனில் அம்பானி லாபமடைந்துள்ளதாகவும் அக்கட்சி கூறி வருகிறது.

அதேசமயம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் வெளியான கட்டுரையில், ரஃபேல் ஒப்பந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு 10 நாள்களுக்கு முன்னர்தான் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த கட்டுரையை வெளியிட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தவறானது, அவதூறானது என்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ், ரிலையன்ஸ் இன்ஃபராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பாளரான அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனம், அதன் ஆசிரியர் ஜாஃபர் அகா, கட்டுரையை எழுதிய விஸ்வதீபக் ஆகியோருக்கு எதிராக குஜராத் மாநிலம் ஆமதாபாத் நீதிமன்றத்தில் ரூ. 5,000 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. 

மேலும், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் சுனில் ஜாகர், ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, உமன் சாண்டி, அசோக் சவான், அபிஷேக் சிங்வி, சஞ்சய் நிருபம் மற்றும் சக்திசிங் உட்பட சில ஊடகவியலாளர்கள் மற்றும் நேஷனல் ஹெரால்டு போன்ற செய்தி நிறுவனங்கள் சிலவற்றின் மீதும் அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதாக அனில் அம்பானி முடிவு எடுத்துள்ளார். 

மனுதாரரின் வழக்கறிஞரான ரசேஷ் பாரிக் இன்று (செவ்வாய்கிழமை) பிடிஜ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதாக எதிர்மனுதாரர்களிடம் தெரிவித்துவிட்டதாக கூறினார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் சிலரின் வழக்கறிஞர் பிஎஸ் சாம்பனேரி தெரிவிக்கையில், 

"மனுதாரரிடம் இருந்து அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள் வந்துள்ளதாக ரிலையன்ஸ் குழும வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கை திரும்பப் பெறுவதற்கான நீதிமன்ற நடைமுறைகள் கோடைக் கால விடுமுறைக்குப் பிறகு தொடங்கும்" என்றார்.    

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. இந்த சூழலில் ரஃபேல் தொடர்பான அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதாக அனில் அம்பானி முடிவெடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com