'தவறான எண்ணங்களை விடவும், குழப்பம் நல்லது!' #WednesdayWisdom

'தவறான எண்ணங்களை விடவும், குழப்பம் நல்லது!' #WednesdayWisdom

Published:Updated:
'தவறான எண்ணங்களை விடவும், குழப்பம் நல்லது!' #WednesdayWisdom
'தவறான எண்ணங்களை விடவும், குழப்பம் நல்லது!' #WednesdayWisdom
0Comments
Share

"வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம், இரண்டு வழிகள் உங்களுக்கு எதிரே தெரிகின்றன. இரண்டில் எதில் செல்வது என்ற தெளிவான முடிவில்லை. குழப்பம் உங்களை சூழ்ந்திருக்கிறது. ஏதேதோ கணக்கிட்டு ஒரு பாதையில் செல்கிறீர்கள். அந்த வழியில் சிறிது தூரம் சென்ற பின் சின்ன வளைவு இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் இன்னொரு வளைவு இருக்கிறது. இப்படியே ஏகப்பட்ட வளைவுகள் அதிலெல்லாம் திரும்பி, திரும்பி தொடங்கின இடத்துக்கே வந்து சேர்கிறீர்கள்.

இப்போது நீங்கள் தொடங்கிய இடத்தில் இன்னொரு வழி புதிதாக முளைத்திருக்கிறது. ஆக, திரும்பவும் உங்களுக்கு இரண்டு வழிகள். புதிய வழியில் செல்ல முடிவெடுக்கிறீர்கள். அது முடிவற்று சென்றுகொண்டேயிருக்கிறது. நீங்கள் செல்ல வேண்டியது என நினைத்திருக்கும் இடம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. திரும்பிச் சென்றுவிடலாமா என்று யோசிக்கிறீர்கள். இன்னும் சிறிது தூரம் செல்வோம் எனத் தொடர்கிறீர்கள். நீங்கள் சென்று சேர்ந்திருக்கும் இடம், கனவிலும் திட்டமிடாதது. உங்களின் குணங்களுக்கு கொஞ்சம் ஒத்துவராத சூழல். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?"

இது கூட்டம் ஒன்றில் பேச்சாளர் பேசியது. அவரின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலருக்கு புரியவில்லை. இன்னும் சிலருக்கு புரிந்ததைப் போல இருந்தது.

'குழப்பாக இருக்கிறதா?' எனக் கேட்டார் பேச்சாளர். எல்லோரும் 'ஆமாம்' என்பதுபோல தலையசைத்தனர்.  

'இப்போது நீங்கள் இருந்ததுதான் சரியானது. தனக்கு புரியாத ஒன்றை, புரிந்ததைப் போல அதற்கு பதில் அளிக்காமல் அந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவு வருவதற்காக காத்திருந்தீர்களே இதுவே சரியானது. தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில், அங்கேயே நிற்பதே மேலானது' என்றார் பேச்சாளர்.

'ஒரே இடத்தில் நிற்பது தேங்குவதற்கு சமம்' என்று ஒருவர் எழுந்து கூறினார். அதற்கு பேச்சாளர்,

"நீங்கள் சொல்வது உண்மைதான். உங்களுக்கு ஒவ்வாத இடத்தைச் சேர்ந்து கரைந்தே போவதற்குப் பதில் தேங்குவது நல்லதுதானே. இது உங்களின் தன்னம்பிக்கையைச் சிதைப்பதற்காக இப்படி சொல்லவில்லை. தவறான வழியில் செல்வதும் ஒரு வகையில் உங்கள்மீது நம்பிக்கை இழக்காமல் செய்வதுதான். தவறான வழியின் பயணம் செய்தவர் முடிவில் தன்மீது மட்டுமல்ல, உலகத்தின்மீதே நம்பிக்கையை இழந்திருப்பார். தன் லட்சியம் புதையுண்டு போனதாகப் புலம்புவார். அருகில் வாழும் மனிதர்களை நேசிக்காத வாழ்க்கைக்கு தள்ளப்படுவார். அதற்குப் பதில் இரண்டு வழிகள் தொடங்கிய இடத்தில் நிற்பதே நல்லது" என்றார்.

"ஒரே இடத்தில் முடங்கி, மக்கிப் போவதைவிட நகர்ந்துகொண்டிருப்பது நல்லதுதானே" என்று தயக்கத்துடன் கேட்க,

"நிச்சயம் நல்லது. ஒருபோதும் தன்னால் சரியான வழியைக் கண்டுபிடிக்க முடியாது என நினைப்பவருக்கு நிச்சயம் நல்லதுதான்." என்றதும் கூட்டம் அமைதியானது. பின் அவரே தொடர்ந்தார்.

குழப்பங்களே சரியான வழியைத் தேர்ந்தெடுக்கச் செய்யும். குழப்பம் என்பது அருகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாத மயக்கம் அல்ல. அது உரையாடல். தான் செல்ல வேண்டிய வழி எதுவென, தனக்கு இதுவரை தெரிந்த தகவல்களைக் கொண்டு தன்னுடன் நடத்தும் உரையாடல். தன்னிடமிருக்கும் தகவல்கள் போதவில்லை எனும்போது, சூழலிலிருந்து அவற்றைப் பெறுகிறோம். சூழல் என்பது மனிதர்களாக இருக்கலாம்; இயற்கையாக இருக்கலாம். அதன்பின் நாம் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறோம். அப்படிச் செல்லும்போது கூடுதல் தகவல் கொண்டவராகப் புதிய வேகத்தில் நம் பயணம் இருக்கும். இதையே எல்லாவற்றிலும் பொருத்திப் பார்க்கலாம். தவறான எண்ணங்கள், தவறான பழக்கங்கள், தவறான உறவுகள் ஆகியவற்றைவிட குழப்பமே நல்லது" என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு குழப்பம் நீங்கியது. தன்னம்பிக்கை என்பது தவறான வழிகளைத் தவிர்ப்பதாலும் கிடைக்கும்.