மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... நாமினேஷன் பதிவு செய்வது ஏன் அவசியம்?

நாமினேஷன் என்பது, நமக்குப் பிறகு, நாமினேஷனில் பதிந்த உறவுகளுக்கு பணம் எளிதாகச் செல்வதே. வாரிசுதாரர்கள் பிரச்னை என்று வரும்போது, இது எனது முழு உரிமை என்று அவர்கள் வாதிட முடியாது.

Published:Updated:
Investment
Investment
0Comments
Share

வாழ்க்கை நிச்சயமற்றது. இப்போது கொரோனா காலத்தில் அனைவரும் இதை உணர்கிறோம். இந்தத் தருணத்தில், முதலீடுகளில் நாமினேஷன் மிக அவசியம் என்பதை முன்பைவிட அதிகம் உணர்ந்திருக்கிறோம். நாமினி நியமித்திருக்கும்பட்சத்தில் மட்டுமே நமது உறவுகளுக்கு முதலீட்டுப் பணம், எளிதாக, சரியாகப் போய்ச்சேரும்.

முதலீடு செய்யும்போது சரியாகச் செய்யவில்லை அல்லது நாமினேஷனில் மாறுதல் செய்ய வேண்டும் என்றால், இதுவே சரியான தருணம். இன்றே செய்யத் தொடங்குங்கள். நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் என்று எந்த வகையான முதலீடாக இருந்தாலும். எங்கெல்லாம், நாமினேஷன் வசதி உள்ளதோ, அங்கெல்லாம் அதைச் செய்துவிடுவது நல்லது. இப்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் நாமினேஷன் பதிவு பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஃபண்டுகளில் நாமினேஷன்

முதலீட்டாளர்கள், தங்களது ஃபண்ட் கணக்கில் நாமினேஷனை, எப்போது வேண்டுமானாலும் பதியலாம். முன்பு பதிந்ததை மாற்றவும் முடியும். எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்றவும் முடியும். எனவே, நாமினேஷன் செய்யப்பட்டவர் உயிருடன் இருக்கும்போதும், நாம் வேறு ஒருவருக்கு மாற்ற முடியும். உதாரணமாக, முதலில் மகள் பெயரில் இருந்த நாமினேஷனை, அவர் திருமணமாகி சென்ற பிறகு, மகன் பெயரில் மாற்ற முடியும்.

எம்.கண்ணன், ஆலோசகர், radhaconsultancy.blogspot.com
எம்.கண்ணன், ஆலோசகர், radhaconsultancy.blogspot.com

நாமினேஷனை புதிதாகப் பதியவோ, மாற்றவோ ஃபண்ட் நிறுவனங்களிடமிருந்து அதற்கான படிவத்தைப் பெற்று பூர்த்திசெய்து தர வேண்டும். இரண்டு, மூன்று வாரங்களில் பதிவு செய்த விவரம் உங்களுக்கு வரும். அல்லது பூர்த்தி செய்த படிவத்தை கேம்ஸ் (Cams) அல்லது கே ஃபின் டெக்கில் (K Fin Tech - பழைய கார்வி) ஃபண்ட் நிறுவனத்துக்கு ஏற்றவாறு தர வேண்டும்.

நாமினேஷன் பதியும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்:

1. எப்போது வேண்டுமானாலும் பதியலாம்.

2. எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

3. ஒன்று முதல் மூன்று நபர்கள் வரை நாமினியாக நியமிக்க முடியும்.

4. நூறு சதவிகிதத்தை எப்படி வேண்டுமானாலும் பிரித்து பதிய முடியும். ஒருவருக்கு அதிகமாகவும், மற்றவருக்கு குறைவாகவும் இருக்கலாம். உதராணமாக மனைவிக்கு 50%, மகளுக்கு 25%, மகனுக்கு 25%, என்று இருக்கலாம்.

மற்றும் சில வகைகள்

1. 34%, 33%, 33%

2. 50%, 50%

3. 75%, 25%

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

சிறுவர், சிறுமியர்கள் பெயரிலும் பதியலாம். அவர்களது பிறந்த நாள் சான்றிதழ் கொடுக்க வேண்டும். பாதுகாப்பாளர் பெயரும் இருக்க வேண்டும். பாதுகாப்பாளர் முதலீட்டாளராக இல்லாமல் இருப்பது நல்லது. சிறுவர் சிறுமியர்கள் பணம் பெறும்போது 18 வயதைத் தாண்டியிருந்தால், அவர்கள் பெயரில் பான் கார்டு (Pan card) எடுத்து கே.ஒய்.சி ( kyc) கொடுத்து, அவர்களது வங்கிக் கணக்கில் பணம் பெறலாம். நாமினேஷன் செய்யபட்டவர்களுக்கு, பதியும்போது கே.ஒய்.சி தேவையில்லை. பணம் பெறும்போது கே.ஒய்.சி தேவை.

நமது முதலீடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாக நாமினேஷன் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உதாரணமாக ஐ.சி.ஐ.சி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் மனைவிக்கு, ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டில் மகளுக்கு என்று இருக்கலாம்.

நாமினேஷன் வேறு - உயில் வேறு

நாமினேஷன் என்பது, நமக்குப் பிறகு, நாமினேஷனில் பதிந்த உறவுகளுக்கு பணம் எளிதாகச் செல்வதே. வாரிசுதாரர்கள் பிரச்னை என்று வரும்போது, இது எனது முழு உரிமை என்று அவர்கள் வாதிட முடியாது. அந்த முதலீட்டுக்கு வாரிசாகப் பலர் இருக்கும்போது, மற்ற வாரிசுதாரர்களும் நீதிமன்றம் மூலமாக உரிமை கோர முடியும். இதுவே, உயில் எழுதி பதிவு செய்திருந்தால், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களுக்கு மட்டும் பணம் செல்லும். மற்ற யாரும் உரிமை கொண்டாடுதல் முடியாது.

முடிவாக, நாம் இல்லாதபோது, நமது முதலீட்டு பணம் நமது குடும்பத்தில் யார் யாருக்காக எந்த விகிதத்தில் செல்ல வேண்டும் என்று முதலில் முடிவு செய்து, நாமினேட் செய்வது சாலச் சிறந்தது.