வெந்நீர் ஊற்று... வானவில் ஆறு... உலகின் சில அதிசய இடங்கள்!

வெந்நீர் ஊற்று... வானவில் ஆறு... உலகின் சில அதிசய இடங்கள்!

Published:Updated:
வெந்நீர் ஊற்று... வானவில் ஆறு... உலகின் சில அதிசய இடங்கள்!
வெந்நீர் ஊற்று... வானவில் ஆறு... உலகின் சில அதிசய இடங்கள்!
0Comments
Share

உலகில் அனைத்துப் பகுதிகளிலும் நிலப்பரப்புகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில இடங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தும், சில இடங்கள் அச்சமூட்டும். சில இடங்களில் அதன் அழகைக் கொஞ்சம் அதிகமாகவே உணர முடியும். அவற்றை நேரில் பார்த்தால் கண்களுக்குத் தெரிவது கற்பனையா இல்லை நிஜமா என்ற சந்தேகம் கூட ஏற்படும். அப்படி இயற்கையாகவே உருவான சில இடங்கள் உலகில் இருக்கின்றன. 

Antelope Canyon

இந்த இடத்தின் பெயர் தெரிந்திருக்காவிட்டாலும் இதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. உலகில் அதிகம் படம் பிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகவும் இது இருக்கிறது. ஆன்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு (Antelope Canyon) என அழைக்கப்படும் இது அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் இருக்கிறது. இங்கே எடுக்கப்படும் புகைப்படங்களைக் கணினிகளிலும், ஸ்மார்ட்போன்களிலும் வால்பேப்பர்களாக பார்க்க முடியும். நீரால் அரிக்கப்பட்டதால் இந்த அமைப்பு உருவாகியிருக்கிறது. குறுகிய பகுதிகளுக்குள்ளே மேலே இருந்து உள்ளே வரும் ஒளியால் பார்ப்பதற்கு அழகாக இது தோற்றமளிக்கிறது. இந்த இடம் மணற்பாறை வகை பாறைகளால் உருவாகியிருக்கிறது. இங்கே இருக்கும் பாறைகளில் வரி வரியான வடிவங்களைப் பார்க்க முடியும். அமைதியான நிலப்பரப்பாகத் தோற்றமளிக்கும் இங்கே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

Cano Cristales 

ஆறு என்ன நிறத்தில் ஓடும்? தண்ணீர் என்ன நிறத்தில் இருக்குமோ அதைப் பொறுத்துத்தானே அமையும். ஆனால், இந்த ஆறு அப்படிக் கிடையாது, பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும். கொலம்பியா நாட்டில் அமைந்திருக்கிறது இந்த அதிசய ஆறு. இதை `ஐந்து நிற ஆறு ' என்றும் `திரவ வானவில்' என்றும் அழைக்கிறார்கள். இது உலகின் அழகான ஆறுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஜூலை மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரைக்கும் இந்த ஆற்றை வெவ்வேறு நிறங்களில் பார்க்க முடியும். இந்த இடைப்பட்ட காலத்தில் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் மற்றும் கறுப்பு எனப் பல்வேறு நிறங்களில் இந்த ஆறு தோற்றமளிக்கும். ஆற்றுப்படுகையில் வளரும் Macarenia clavigera என்ற தாவரம்தான் இந்த ஆற்றின் வேறுபட்ட நிறங்களுக்குக் காரணமாக இருக்கிறது.

Pamukkale 

துருக்கிக்குச் சென்றால் கலை நயம் மிக்க பல கட்டடங்களைப் பார்க்க முடியும். அங்கே இயற்கையாகவே அழகாக அமைந்திருக்கிறது பமுக்காலே வெந்நீர் ஊற்று. துருக்கிய மொழியில் இதைப் பருத்திக் கோட்டை என்று அழைக்கிறார்கள். பார்ப்பதற்கு ஏதோ பனிப் பிரதேசத்தில் இருப்பதைப் போல தோற்றமளிக்கிறது. ஆனால், இது குளிரான பகுதி கிடையாது. இந்த நிறத்துக்குக் காரணம் நீரில் இருக்கும் கால்சியம் கார்பனேட் படிவதன் காரணமாக வெண்மையான நிறத்தில் தோற்றமளிக்கிறது. மொத்தம் இந்தப் பகுதியில் 35° செல்சியஸ் முதல் 100° செல்சியஸ் வரை வெப்பநிலை கொண்ட 17 ஊற்றுகள் இருக்கின்றன. யுனெஸ்கோ இதை உலகப் பாரம்பர்ய தளமாக அங்கீகரித்துள்ளது.

Salar de Uyuni

நமது ஊரில் உப்பளங்களைப் பெரும்பாலும் கடற்கரை ஓரங்களில் பார்க்க முடியும். கடல் நீரை நிலத்தில் பாய்ச்சி உப்பானது தயாரிக்கப்படும். ஆனால், பொலிவியா நாட்டில் அமைந்திருக்கும் Salar de Uyuni -யில் மனிதர்கள் யாரும் உப்பை உருவாக்கத் தேவையிருக்காது, இந்த இடம் முழுவதுமே உப்பு கொட்டிக் கிடக்கிறது. சுமார் 10,582 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த உப்புப் படுகை. இதுதான் உலகின் மிகப் பெரிய உப்புப் படுகையாகும், இங்கே சென்று பார்த்தால் கண்களுக்குத் தெரிவதெல்லாம் வெறும் உப்பு மட்டும்தான். இந்தப் பகுதியில் மட்டும் 11 பில்லியன் டன்களுக்கு மேலாக உப்பு இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். மழை பெய்தால் இதன் மேற்பரப்பில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது இந்த இடம் பிரதிபலிக்கும் தன்மையைப் பெரும். அந்தச் சமயத்தில் இதுதான் உலகின் மிகப்பெரிய இயற்கையான கண்ணாடியாக இருக்கும். 

Grand Prismatic Spring

அமெரிக்காவில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் இருக்கிறது இந்த வெப்ப நீரூற்று. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் எனப் பல்வேறு நிறங்களில் காட்சியளிப்பதுதான் இதன் சிறப்பம்சம். இது அமெரிக்காவின் மிகப் பெரிய வெப்ப நீரூற்றாகவும் உலகில் உள்ள மூன்றாவது பெரிய வெப்ப நீரூற்றாகவும் இருக்கிறது. சராசரியாக 370 அடி குறுக்களவு கொண்ட இதன் ஆழம் 370 அடியாகும். 70 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நிமிடத்திற்கு 2,100 லிட்டர் நீர் இதிலிருந்து வெளி வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் நுண்ணுயிரிகள்தாம் இந்த நிறத்துக்குக் காரணமாக இருக்கின்றன.