மக்கள் பணத்தில் சொந்த தோட்டத்திற்குச் சாலை அமைத்த அ.தி.மு.க பிரமுகர்...?!

மக்கள் பணத்தில் சொந்த தோட்டத்திற்குச் சாலை அமைத்த அ.தி.மு.க பிரமுகர்...?!

Published:Updated:
மக்கள் பணத்தில் சொந்த தோட்டத்திற்குச் சாலை அமைத்த அ.தி.மு.க பிரமுகர்...?!
மக்கள் பணத்தில் சொந்த தோட்டத்திற்குச் சாலை அமைத்த அ.தி.மு.க பிரமுகர்...?!
0Comments
Share

" 'குடிக்கத் தண்ணீர் இல்லை; ஆனா வாய் கொப்பளிக்க பன்னீர்ன்னு' ஒரு சொலவடை உண்டு. அதுபோல், மக்கள் நாங்க போய்வர சரியான சாலை வசதிகள் இல்லாம, குண்டும் குழியுமான சாலைகள்ல சென்றுவந்துகிட்டு இருக்கோம். ஆனால், கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் தலைவரோட கணவர், ஒரு குடியிருப்புகூட இல்லாத அவருடைய தோட்டங்கள் இருக்கும் இரண்டு பகுதிகளுக்கும் தரமான தார்ச்சாலைகள் போட்டிருக்கிறார். கலெக்டர் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. காரணம், சம்பந்தப்பட்ட நபர், நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் ஆதரளவாளர் என்பதுதான். இந்தக் கொடுமை நடந்திருப்பது தம்பிதுரை தத்தெடுத்த ஊராட்சியில் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை" என்று சோகத்துடன் சொல்கிறார்கள் கடவூர் அருகே பாலவிடுதி கிராமத்தைச் சேர்ந்த மக்கள்.

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் அடங்கியது பாலவிடுதி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட சிங்கம்பட்டியைச் சேர்ந்த தேன்மொழி, கடவூர் ஒன்றிய முன்னாள் சேர்மனாக இருந்தார். இவரின் கணவர் செல்வராஜ் மீதுதான், 'மக்களின் பயன்பாட்டுக்கு சாலைஅமைக்காமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருடைய சொந்தத் தோட்டங்களுக்கு அரசுப் பணத்தில் சாலைகள் போட்டுக் கொண்டார்" என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

பாலவிடுதி ஊராட்சி அத்திக்குளத்துப்பட்டி, சாந்துவார்பட்டி, சிங்கம்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய, மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஊராட்சியாகும். மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, இந்த ஊராட்சியைத்தான் தத்தெடுத்துள்ளார். இந்தக் கிராமங்கள் அனைத்துமே வறட்சி மிகுந்தவைதான். வானம் பார்த்த பூமியைக் கொண்டவை. இங்குள்ள மக்கள் சாலை, குடிநீர் என அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கே அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தன் தோட்டங்களுக்கான சாலையை அரசு செலவில் அமைத்துக் கொண்டிருப்பது அந்தப் பகுதி மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க பிரதிநிதி பிரபு, "எங்க ஊரை, தம்பிதுரை தத்தெடுத்தப்போ, 'உங்க ஊருக்கு அஞ்சு வருஷத்துல அனைத்து வசதிகளும் வந்து சேர்ந்துடும். குறிப்பா முக்கியச் சாலைகளை தார்ச் சாலைகளாகவும், உள்சாலைகள் அனைத்தையும் சிமெண்ட் சாலைகளாகவும் தரம் உயர்த்தப்படும்' என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனா, ஒரு சாலையைக்கூட அவர் சொன்னது மாதிரி 'தரம்' உயர்த்தவில்லை. மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சியான இங்கு எந்த வசதியும் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சாலையும் உருப்படியாக இல்லை. பாலவிடுதி முதல் செம்பிநத்தம் வரையுள்ள மக்கள் அன்றாடம் பயன்படுத்துற இரண்டரை கிலோமீட்டர் சாலை குண்டும்குழியுமா கிடக்கு. அதேபோல், கவரப்பட்டியில் இருந்து செங்காட்டுப்பட்டி வழியா களத்தூர் போற சாலையில் சைக்கிளில்கூட செல்ல முடியாது. அந்தளவுக்கு மோசமா இருக்கு. அப்புறம் ராமகிரி பாதைன்னு சொல்லப்படுற கஸ்தூரி குரும்பப்பட்டியில் இருந்து சாந்துவார்ப்பட்டி வழியா கடவூர் போற சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதுபோல், பாலவிடுதி ஊராட்சியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட சாலைகளில் பயணிக்கவே முடியாத நிலை உள்ளது. ஆனா, தம்பிதுரை ஆதரவாளரான செல்வராஜ், தன் சொந்த பயன்பாட்டுக்காக, ஒரு குடியிருப்புகூட இல்லாத இரண்டு பகுதிகளுக்கு தரமான தார்ச்சாலைகள் போட்டுக்கிட்டார்" என்றார்.

தே.மு.தி.க. கடவூர் ஒன்றிய பொருளாளர் நாகராஜ், "தம்பிதுரைக்கு ரொம்ப நெருக்கமான நபர் செல்வராஜ். கடவூர் ஒன்றியத்திற்கு தம்பிதுரை வந்தால், முதல்ல செல்வராஜ் வீட்டுக்குத்தான் போவார். அதனால், இந்த ஒன்றியத்தில் கடந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி சாதாரணமா இருந்த செல்வராஜ், தன் மனைவி கடவூர் ஒன்றிய சேர்மனாக இருந்த அஞ்சு வருடத்தில், அந்தப் பதவியைப் பயன்படுத்தி ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிக் குவிச்சுட்டார். சிங்கம்பட்டி மலையை ஒட்டி இரண்டு இடங்களில் நூறு ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த நிலங்களுக்குச் செல்வதற்காகவே சிங்கம்பட்டியில் இருந்து மலையை ஒட்டியுள்ள இரண்டரை கிலோமீட்டர் தூரத்திற்கு ஓர் தார்ச்சாலையையும், அதே மலையையொட்டி மற்றொருபுறம் உள்ள 50 ஏக்கர் தோட்டத்திற்குச் செல்ல இரண்டரை கிலோமீட்டர் தூரத்திற்கு மற்றொரு தார்ச்சாலையையும் போட்டுக்கிட்டார். இதை பாலவிடுதி மக்கள் கடுமையா கண்டிச்சாங்க.  அப்போதைய மாவட்ட கலெக்டரிடம், செல்வராஜின் சுயநலப் போக்கு பற்றி அப்போதைய கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். 

எனினும், தம்பிதுரையின் ஆதரவாளர் என்பதாலும், ஆளுங்கட்சி புள்ளி என்பதாலும் கடமைக்கு அதிகாரிகளை அனுப்பி பெயரளவுக்கு விசாரிக்கச் சொல்லிட்டு, 'சாலை விவகாரங்கள்ல தப்பு ஏதும் நடக்கலை'ன்னு சொல்லிட்டார் கலெக்டர். இதுசம்பந்தமாக, முதலமைச்சரின் தனிப்பிரிவு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்னு பலருக்கும் மனு அனுப்பினோம். யாரும் நடவடிக்கை எடுக்கலை. 'இந்தச் சாலைகள் விவகாரம் பெரிதானால், பாலவிடுதி ஊராட்சிக்கு எந்தவொரு துரும்பையும் கிள்ளிப் போடலை'ங்கிற உண்மை வெளிய தெரிஞ்சுரும்னு பயந்து, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கவிடாம தம்பிதுரை தடுக்கிறதா சொல்றாங்க. இந்தச் சாலைகள் விவகாரத்திற்கு ஒரு முடிவு கிடைக்குறவரை, நாங்க ஓயமாட்டோம்" என்றார் ஆக்ரோஷமாக. 

இதுதொடர்பாக, கடவூர் ஒன்றிய முன்னாள் தலைவர் தேன்மொழியின் கணவர் செல்வராஜிடம் பேசினோம்.

 "நீங்க நேரா வந்து பார்த்து ஆய்வு பண்ணிட்டு, நான் தப்பு பண்ணியது உண்மைன்னா, என்னோட சட்டையைப் பிடிச்சு கேள்வி கேளுங்க சார். நான் தப்பு பண்ணலன்னா, என் மீது புகார் கொடுத்தவங்ககிட்ட, 'ஏன் பொய்ப் புகார் கொடுத்தீங்கன்னு' நாக்கைப் பிடுங்குறமாதிரி கேள்வி கேளுங்க. நான் என்னோட சொந்தப் பயன்பாட்டுக்கு எல்லாம் சாலைபோடலை. மக்கள் பயன்பாட்டுக்குப் போடப்பட்ட சாலைகள்தாம் அவை. ஊர்ல தி.மு.க, தே.மு.தி.கவுல வேலையே இல்லாம பல பேர் திரியுறாங்க. என்மேல எதையாவது பொய் பெட்டிஷன்களை போடுறதுதான் அவர்களின் முழுநேர வேலை. அதிகாரிகள் இந்தப் பகுதிக்கு வந்து அந்த இரண்டு சாலைகள் பற்றி ஆய்வு பண்ணினாங்க. ஆனா, முடிவில் என்மீது சுமத்தப்பட்டுள்ளது பொய்க் குற்றச்சாட்டு என்பது தெரியவந்தது. தேவையில்லாம தம்பிதுரை பெயரையும் இதுல இழுக்கறாங்க. மத்திய அரசு அறிவித்த ஸ்பெஷல் நிதி எதுவும் வரவில்லை. எம்.பி-க்களுக்கான தொகுதி நிதியை கரூர் எம்.பி தொகுதி முழுக்க அவர் செலவு செய்ததால், பாலவிடுதி கிராம மக்கள் விடுத்த கோரிக்கைகளை அவரால் முழு அளவில்  நிறைவேற்ற முடியவில்லை" என்று தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்தார். 

நெருப்பில்லாமல் புகையுமா? மாவட்ட நிர்வாகம் இந்தச் சாலை விவகாரத்தை சீரியஸாக ஆய்வு செய்ய வேண்டும்!