``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்!" - செந்தில் பாலாஜி வாக்குறுதி

``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்!" - செந்தில் பாலாஜி வாக்குறுதி

Published:Updated:
``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்!" - செந்தில் பாலாஜி வாக்குறுதி
``4 எம்.எல்.ஏ., ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பேன்!" - செந்தில் பாலாஜி வாக்குறுதி
0Comments
Share

தி.மு.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்டாலினிடம், ``கரூர்ல உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.க-வை ஜெயிக்க வைப்பது என்பாடு. எத்தனைக் கோடி கொட்டி செலவு செய்தாவது அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்" என்று சொன்னதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த இவர், சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் சிக்கி பதவியை இழந்தார். கடந்த பத்து நாள்களுக்கு முன்பே, 'தி.மு.க-வுக்குத் தாவப் போகிறார்' என்ற பரபரப்பு கிளம்பியது. ஆரம்பத்தில், 'அது வதந்தி' என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் செந்தில் பாலாஜி தி.மு.கவுக்குப் போகப் போறது உறுதி என்று தெரிந்தது. முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளருமான கரூர் சின்னசாமி தலைமையில் அவர் தனது ஆதரவாளர்களோடு இன்று தி.மு.க-வில் இணைந்தார்.

`அ.ம.மு.க-வும், அ.தி.மு.க-வும் இணையப் பேச்சுவார்த்தை நடக்கிறது' என்ற ஒற்றைப் பரபரப்பு தகவலால்தான் அவர் தி.மு.க-வுக்கு தாவ முடிவெடுத்தார் என்கிறார்கள். செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்தச் சொல்லி முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பொருளாளர் ரெங்கசாமியை அனுப்பி வைத்தார். ஆனால், அவர்களை சந்திக்காமல் செந்தில் பாலாஜி டிமிக்கி கொடுத்தார். தானே நேரடியாகச் செந்தில் பாலாஜியிடம் தினகரன் பேசியும், 'உங்களுக்காகப் பல கோடி ரூபாய் செலவு பண்ணியாச்சு. இனிமேல் செலவு பண்ண வழியில்லை. உங்களோடு இருந்தால் அரசியல் வாழ்க்கை எனக்கு அஸ்தமனமாகிவிடும். எந்த வகையிலும் என்னைத் தடுக்க முடியாது' என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம்.

கரூர் சின்னசாமி மூலமாக தி.மு.க-வில் இணைந்த செந்தில் பாலாஜி ஆரம்பகட்ட முயற்சியைச் செய்தாலும், அதன்பிறகு எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் மூலமாக ஸ்டாலின் மருமகன் சபரீசனையும் சந்தித்து சில உத்தரவாதங்களைப் பெற்ற பிறகே தி.மு.க-வுக்குப் போவதை 100 சதவிகிதம் உறுதி செய்திருக்கிறார். அதன்பிறகு,ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, ``அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் சீட். கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி தர வேண்டும்" என்று கேட்டு ஸ்டாலினிடம் ஓகே வாங்கி இருக்கிறார். அதன்பிறகு ஸ்டாலினிடம், ``அதற்குப் பரிசா நான் சில வெற்றிகளைப் பெற்றுத்தருவேன்.

இப்போ கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் குளித்தலையில் மட்டும்தான் தி.மு.க ஜெயிச்சுருக்கு. கரூர் எம்.பி தொகுதியிலும் தம்பிதுரைதான் எம்.பியாக உள்ளார். நான் தி.மு.க-வுக்கு வந்ததும், எனக்குச் சில அதிகாரங்களைக் கொடுத்தால் வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் நான்கு எம்.எல்.ஏ தொகுதிகளிலும், ஒரு எம்.பி தொகுதியிலும் தி.மு.கவை அமோகமாக ஜெயிக்க வைப்பேன். அதற்கு, எத்தனை கோடி செலவானாலும் சொந்தப் பணத்தை இறக்கத் தயார்" என்று சொன்னாராம். அதனைக் கேட்டதும்தான், ஸ்டாலின் பூரித்துப் போய், செந்தில் பாலாஜி தி.மு.க-வுக்கு வருவதற்கு முழுச் சம்மதம் சொன்னாராம்.