என் பெயர் கரிகாலன் என்கிற…

19.5.1982 அன்று சென்னை பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிக் சண்டைக்கு முன்பு…

மயிலாப்பூரில் உள்ள சாலைத் தெருவில் தான் பிரபாகரன் தங்கிருந்தார். அதற்கு முன்பு பெசண்ட் நகர் வேளாங்கன்னி கோயில் எதிரே இன்று முருகன் இட்லி கடை உள்ளதே, அதற்கு பின்புறம் ஒரு வீட்டில் குடியிருந்தார். அந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தது பழ.நெடுமாறன் அவர்களும், அவரோடு இருந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனும்தான். அங்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்க, பெரும் சிக்கலானது.

அதன் பிறகுதான், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவிற்கு இடமாற்றமானார் தலைவர்.

அப்போது முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரனுக்கும், தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் முரண்பாடு முற்றி மோதலில் நகர்ந்துகொண்டிருந்தது. உமா மகேஸ்வரன் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்தார். தலைவர் பிரபாகரன் அவர்கள் மயிலையில்.

புலிகள் இயக்கம் பிரதான அறிமுகமில்லா காலம் அது.

குறிப்பிட்ட அந்த நாளில், ரவீந்திரன், ஜெகதீஸ்வரன் ஆகிய இரண்டு போராளிகளோடு பாண்டிபஜாருக்கு சென்றார் தலைவர் பிரபா அவர்கள். அங்கே எதேச்சையாக முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரனும் எதிரில் வந்தார். சந்தித்துக்கொண்டபோதில் பழைய முரண்பாடுகளைப் பற்றி பேச, அது முற்றி ஆவேசத்தில் முடிய, இருவருமே தற்காப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்கள்.

தலைவர் பிரபாகரனும் அவருடனிருந்தவர்களும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் வீட்டிற்கு ஒரு ஆங்கில பத்திரிகை நிருபர், ‘என்ன சார், என நடந்த சம்பவத்தைச்சொல்லி, கைதான நபர் உங்க வீட்டில்தான் தங்கியிருந்தாராமே’ என்ற தகவலைச் சொல்ல, உடனே ஆட்டோ பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையம் சென்றார்.

நடந்த விடயத்தைச் சொல்லி, “நான் இப்போது இந்தியாவில்தான் இருக்கிறேன். ஆனபடியால் இந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டியது என் கடமை. அதான் துப்பாக்கிச் சண்டை முடிஞ்சதும் நானே போலீஸ்கிட்ட அரெஸ்ட்டாகிட்டேன்” என்று நடந்ததை சொன்னார்.

காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன், துப்பாக்கி சண்டை போட்டக்கொண்டவர்களை நக்ஸலைட்டுகள் என்றே கூறினார். இலங்கை போராளிகள் இயக்கம் பற்றி ஏதும் அவருக்கு தெரியாது. பிரபாகரன் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் துப்பாக்கியை கொடுத்துவிட்டு, தங்களோடு வந்ததாக கூறினார் இன்ஸ்பெக்டர்.

(இரண்டு நாட்கள் கழித்து உமா மகேஸ்வரன் (முகுந்தன்) பூண்டி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.)

தலைவரின் வாக்குமூலம் இப்படித் தொடங்குகிறது.

“என் பெயர் கரிகாலன் என்கிற வேலுப்பிள்ளை பிரபாகரன். நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன். நாங்கள் எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலை வீரர்கள்” என்று தொடங்கி TNT(Tamil National Tigers) என்ற பெயரில் இயக்கம் இருந்தது, முகுந்தனை விட்டு பிரிந்த பிறகு LTTE என்ற இயக்க்ததை தொடங்கியது என்பதை சொல்லி, நடந்த துப்பாக்கி சண்டையின் பின்னணியையும் எழுதிக்கொடுத்தார்.

அடுத்த நாள் அவர் சென்னை மத்திய சிறையில் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே இருந்த சிறை) அடைக்கப்பட்டார். அதுவரையிலும் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்தான் உடன் இருந்தார். வேறு யாருமில்லை. ஜாமீன் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலை இருந்துள்ளார்.

செய்தி வெளியாக, இலங்கை அதிபர் ஜெயவர்தனே, ‘பிரபாகரன்-முகுந்தன் உள்ளிட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்தியாவுக்கும்-இந்திராவுக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்.

தகவல் கிடைத்து, மதுரையில் இருந்து அடித்துப் பிடித்துவந்த பழ.நெடுமாறன் அவர்கள், முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தகவலைக் கூறிவிட்டு, உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். ஓமந்தூரார் தோட்ட வளாகத்தினுள், பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்த பழ.நெடுமாறன் அலுவலகதில் தான் அந்த கூட்டம் நடந்தது.

அந்த வளாகத்திற்குள்ளாகவே இருந்த திமுக-வின் கட்சி அலுவலத்தில் இருந்த கலைஞரை, வழக்கறிஞர் கே. எஸ் ராதாகிருஷ்ணனும், பேபி சுப்ரமணியனும் நேரில் சென்று சந்தித்து, நடந்தவைகளை கூறினார்கள்.

கருணாநிதி கேட்டுக்கொண்டரே ஒழிய எந்த கருத்தையும் கூறவில்லை.

அனைத்துக்கட்சி கூட்டதிலும் திமுக-கருணாநிதி சார்பாக ஒருவரும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளவில்லை. ஆளும் கட்சி என்றதால், எம்.ஜி.ஆர்-அதிமுக தரப்பில் யாரும் வரவில்லை.

ஆனால், ‘இப்படி ஒரு கூட்டம்-தேவை’ என்பதை எல்லாம் எம்ஜிஆரும்-நெடுமாறனும் தான் திட்டமிடுகிறார்கள்.

அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, கா.கா.தே.கா (காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ்) குமரி ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலர் பா.மாணிக்கம், ஜனதா கட்சி இரா.செழியன், பார்வர்டு பிளாக் ஆண்டித்தேவர், லோக்தல் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் பங்கேற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கரிகாலன் என்கிற வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது என்பதுதான் தீர்மானத்தின் அழுத்தம்.

அந்த அந்த தீர்மானத்தோடு அடுத்தநாள் டெல்லிக்கு சென்றார் பழ.நெடுமாறன். கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.

பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்து, நடந்தவைகளை எல்லாம்கூறி, “பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது” என்பதை வலிறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

அப்போது இந்திராகாந்தியின் ஆலோசகராக இருந்தவர் பார்த்தசாரதி ஐயங்கார். (அண்ணல் அம்பேத்கர் சட்டவரைவை எழுதிய குழுவில் இருந்த கோபால்சாமி ஐயங்காரின் மகன்) அந்த பார்த்தசாரதி ஐயங்காரும் அங்கே இருந்தார்.

அந்த ஐயங்காரும் ‘பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்ககூடாது. பங்களாதேஷ்கு விடுதலையை வாங்கிக்கொடுத்ததைப் போல் இவர்களுக்கும் (தமிழீழம்) விடுதலையை வாங்கிக்கொடுக்க வேண்டும்’ என்ற கருத்தை பார்த்தசாரதி ஐயங்காரும் கூறினார்.

இங்கே திமுக-வின் பங்கு எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் சில உடன் பிறப்புகள் எழுதி வருவதைப்போல், பிரதமர் இந்திராவிடம் வலியுறுத்தி கடிதம் ஏதும் கலைஞர் அளிக்கவில்லை. பிரதமரிடம் பேசவுமில்லை.

ஆனால், சில நாட்கள் கழித்து, ‘பிரபாகரனை இலங்கையில் ஒப்படைக்கக்கூடாது’ என்ற அறிக்கை அளித்திருக்கின்றார்.

நடந்தது இதுதான். எல்லா கட்சிகளுடனும் பேசி ஓடி உழைத்தது எல்லாமும் பழ.நெடுமாறன் அவர்கள்தான், சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்தது வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான். அறிக்கை விட்டு ஆதரித்து நின்றுகொண்டார் கலைஞர்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் அப்படி சிறைச்சாலைக்கு சென்று தலைவர் பிரபாகரன் அவர்ளை சந்தித்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில்தான் வைகோ உள்ளிட்ட சிலரை அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தார்.

தலைவர் கலைஞர் ஆதரித்தார். பின்னாளில் உதவியுமிருக்கலாம். ஆனால் அவர்தான் பிரபாகரன் அவர்களை அன்று காத்தார். இல்லை என்றால் இந்த பிரபாகரனே இருந்திருக்க மாட்டார் என்று ‘யுனஸ்கோ விருது’ கணக்காக அடித்துவிட்டு, வரலாற்று திரிபு வேலைகளை செய்யக்கூடாது என்கிறோம்.

பா. ஏகலைவன்
மீள்பதிவு.

பின்னூட்டமொன்றை இடுக