இன்று  இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: மே 23-இல் வாக்கு எண்ணிக்கை

நாடே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்ஸாபூரில் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்ஸாபூரில் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்.


புது தில்லி: நாடே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி உள்பட 59 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி உள்பட மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, 10.01 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம், 1.12 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது.

உ.பி.யில்...: உத்தரப் பிரதேசத்தில் வாராணசி உள்பட 13 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. வாராணசியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் ஷாலினி யாதவும் போட்டியிடுகிறார்கள். மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, பாஜக மாநிலத் தலைவர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

பஞ்சாபில்...: பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், 24 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 278 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அவருடைய மனைவியும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர் பாதல், மற்றொரு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நடிகர் சன்னி தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

சண்டீகரில்..: யூனியன் பிரதேசமான சண்டீகரில் மீண்டும் போட்டியிடும் பாஜக எம்.பி. கிரண் கெருக்கும், முன்னாள் ரயில்வே அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பவன் குமார் பன்சாலுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்கத்தில்..: திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக என நான்குமுனைப் போட்டி நிலவும் மேற்கு வங்கத்தில் 9 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 111 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றியை 1.49 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

பிகாரில்...: பிகாரில் 8 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், மத்திய அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத், ராம் கிருபால் யாதவ், ஆர்.கே.சிங், அஸ்வனி குமார் செளபே ஆகியோர் உள்பட மொத்தம் 157 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ரவிசங்கர் பிரசாத் போட்டியிடும் பாட்னா சாகிப் தொகுதியில், அவரை எதிர்த்து பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய நடிகர் சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

ஜார்க்கண்டில்...: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், முன்னாள் முதல்வர் சிபுசோரன் உள்பட 42 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

சிபுசோரன், ஏற்கெனவே 8 முறை வெற்றிபெற்ற தும்கா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, கடந்த 2009, 2014-ஆம் ஆண்டுகளில் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்ட பாஜக வேட்பாளர் சுனில் சோரன் மீண்டும் போட்டியிடுகிறார்.

மத்தியப் பிரதேசத்தில்..: மத்தியப் பிரதேசத்தில் உஜ்ஜைன், ரட்லம், இந்தூர் உள்பட 8 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக வசம் உள்ள இந்த 8 தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.

தலைவர்கள் பிரசாரம்..: இந்த தேர்தலுக்காக, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டனர். இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.

இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவைடந்தது. கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் பேரணி நடைபெற்றபோது வன்முறை மூண்டதால், தேர்தல் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமையுடன் முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்திய தேர்தல் வரலாற்றில், தேர்தல் ஆணையம் இதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுத்தது இதுவே முதல் முறையாகும்.

இதுவரை நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் சராசரியாக, 66.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 7-வது கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் ஏற்கெனவே நடந்து முடிந்த 6 கட்டத் தேர்தல்களில் பதிவான வாக்குகளும் சேர்த்து, வரும் மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com