அரியலூர்: அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூடுவதை தடுக்க வண்ண அட்டைகள்

அரியலூர்: அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூடுவதை தடுக்க வண்ண அட்டைகள்
அரியலூர்: அத்தியாவசிய தேவைகளுக்கு  மக்கள் கூடுவதை தடுக்க வண்ண அட்டைகள்

அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக அளவில் மக்கள் கூடுவதை தடுக்க அரியலூர் மாவட்ட நிர்வாகம் வண்ண அட்டைகளை வழங்கி அசத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. தற்போது வரை 5 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் ஒத்துழைப்பு அரசுக்கு சரிவர இல்லை என்றும் இது தொடர்ந்தால் 144 தடை உத்தரவு இன்னும் கடுமையாக்கப்படும் எனக் கூறினார். அதன்படியே பல இடங்களில் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளும் நேரமும் மதியம் 1 மணி வரை குறைக்கப்பட்டுள்ளது.  நேரம் குறைக்கப்பட்டதால் ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடும் நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் அதிக அளவில் வெளியே வருவதைத் தடுக்க அரியலூர் மாவட்ட நிர்வாகம் புதிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. வீட்டிற்கு ஒருவர், அதுவும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே வெளியே வரும் வகையில் வீடுகள் தோறும் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

இதற்காக 3 வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பச்சை நிற வண்ணத்தில் உள்ள அனுமதி அட்டை வைத்திருப்போர் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், நீல நிற அனுமதி பெற்றிருப்போர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொருட்களை வாங்க வெளியே வர அனுமதிக்கப்படுவர். இளஞ்சிவப்பு வண்ணத்தில் அனுமதி அட்டை வைத்திருப்போர் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிச் செல்லலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீட்டிற்கு ஒருவர் மட்டுமே கடைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும், அவ்வாறு வெளியே வருபவர்கள் அடையாள அட்டை எடுத்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com