ஆம் ஆத்மியின் அடுத்த இலக்கு...அதிர்ந்து போன பாஜக...காங்கிரஸ் கட்சிக்கு தொடர் நெருக்கடி

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக அகமதாபாத் சென்றுள்ளனர்.
கேஜரிவாலுடன் பஞ்சாப் முதல்வர்
கேஜரிவாலுடன் பஞ்சாப் முதல்வர்

பாரம்பரிய கட்சிகளான காங்கிரஸ், அகாலி தளத்தை வீழ்த்தி ஆம் ஆத்மி பஞ்சாபில் அபார வெற்றியை பெற்றுள்ளது. கோவாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் வாக்குகளை பெற்றுள்ளது.

இதையடுத்து, இந்தாண்டின் இறுதியில் குஜராத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு தயாராகிவருகிறது ஆம் ஆத்மி. கடந்த 1995ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடத்திவரும் குஜராத்தில் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இதையொட்டி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக அகமதாபாத் சென்றுள்ளனர். இன்று, சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் அவர்கள் பின்னர், இரண்டு கிமீ தூரத்திற்கு சாலை பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, அகமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு செல்லவுள்ளனர்.

தில்லியில் உள்ள கேஜரிவாலின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கருத்தில் கொண்டு, இரண்டு தலைவர்களின் பயணத்தை முன்னிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி குஜராத் மாநில ஆம் ஆத்மி சார்பில் அகமதாபாத் காவல்துறை தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என கேஜரிவால் கடந்தாண்டே அறிவித்துவிட்டார். கடந்தாண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் கூட ஆம் ஆத்மி நல்ல வாக்குகளை பெற்றிருந்தது. 31 தாலுக் பஞ்சாயத்து வார்டுகளையும் ஒன்பது நகராட்சி வார்டுகளையும் இரண்டு மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளையும் கைப்பற்றியிருந்தது. 

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராஜ் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக களம் கண்ட ஆம் ஆத்மி, ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியவில்லை. கட்சியின் முக்கிய முகங்களான கேஜரிவால், மணிஷ் சிசோடியா ஆகியோர் பிரசாரத்திற்கு செல்லாததால் போட்டியிட்ட 29 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

ஆனால், இந்த முறை, கடந்தாண்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவுடன் சூரத்தில் நடைபெற்ற பேரணியில் கேஜரிவால் கலந்து கொண்டார். 

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே குஜராத்தில் பாஜக பிரசாரத்தை தொடங்கிவிட்டது. அங்கு நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சிக்கே போட்டி என்றும் பாஜக மூத்த தலைவர்கள் கூறிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com